Sunday, July 15, 2018

ஆயுத பலம்

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இலங்கை அரசின் இராணுவ பலமென்ன..?

80களில் இலங்கை அரசின் புலனாய்வு வலையமைப்பு, இராணுவ தகவல் தொழில் நுட்பம், அதி நவீன கனரக ஆயுதங்கள், செய்மதி மூலம் கண்காணித்தல், உலகப் புலனாய்வு வலையமைப்புகளோடு இணைக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்தளவில் வளர்ச்சி அடைந்திருந்தது?

தம்முடைய பிராந்திய தேவைகளுக்காக ஈழத்தின் போராட்ட இயக்கங்களுக்கு  பயிற்சியும், ஆயுதங்களும் இந்தியா கொடுக்க முன்னர் எம்முடைய இராணுவ வளர்ச்சியும் வளமும் எந்தளவில் இருந்தது..?

அப்போது உருவாகிய இராணுவ தலைமைகளில் தம்பிப்பிள்ளை மகேஸ்வரனின் (TEA) மட்டுமே இந்தியாவில் பயிற்சி பெறாமல் சுயம்பாக உருவாகியது.
இந்தியாவில் பயிற்சி பெற்ற இயக்கங்களுள் புலிகள் அமைப்பு மட்டுமே இந்தியாவின் சதிக்குள் வீழாமல் சுயமாக இயங்கியது.

விமானப்படை தவிர்ந்த இராணுவ  வளர்ச்சியில் ஏறத்தாள இலங்கை அரசை எதிர் கொள்ளக் கூடியதாக இருந்து போராடிய காலமும், இப்போது நாமிருக்கும் கையறு நிலையும், எதிரியின் பலமும் இலங்கை மீதான உலகின் தேவையும் ஒன்றானதா?

உலக ஒழுங்கின் தேவைக்கு ஏற்ப உச்சமாக வளர்ச்சி அடைந்து இன்று அனைத்து தேசங்களையும் இணைக்கும் இராணுவ புலனாய்வு கண்காணிப்பு வலையமைப்பு இயங்கும் முறையும், நாம் போராடி வளர்ச்சி அடைந்த காலமும் ஒன்றானதா..?

எமக்கான ஆயுத வழிப்பாதைகளையும், கடல்வழிப்பாதைகளையும் துல்லியமாகக் கண்காணிக்கும் தொழில் நுட்ப வலையமைப்பு இணைக்கப்பட்டு எம்முடைய  உள்வரும் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட நாம் பலவீனமானோம், தவிரவும் இராணுவ தொழில் நுட்பத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த பல தேசங்கள் நேரடியாக இலங்கை அரசோடு உள்ளகத்திலும் இறங்கிச் செயற்பட்ட போது முடிந்தவரை முயன்று பார்த்து கடைசியில் என்ன காரணத்துக்காக ஆயுதங்களை மெளனிப்பதாக அறிவித்தோம்?

அன்று ஆயுத, இராணுவ பலத்தில், தொழில் நுட்ப வளத்தில் மன ஓர்மத்தையும் வைத்து கேள்வி கேட்க முடிந்த எம்மால் இன்று நாமுள்ள நிலையில் அதே போலொரு போராட்டத்தை உடனடியாக முன்னெடுக்க முடியுமா..?

யதார்த்த களநிலையில் அடையாளக் குண்டெறிதல் புத்திசாலித்தனமானதா..?
ஆயுதங்கள் மெளனிப்பதாக அறிவித்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ஒரு கைக்குண்டைக் கூட எம்மால் வெற்றிகரமாக இன்னும் எறிய முடியவிலையே ஏன்..?

சரி அங்கிங்காய் சிலரிடம் இருக்கும் மிகச் சொற்ப ஆயுதங்களை எடுத்து நீண்டதொரு ஆயுதப்போராட்டத்தை இப்போதைக்கு நிகழ்த்த முடியுமா..? 

முப்பது வருடமாக பல நவீன யுத்தங்களையும், வல்லாதிக்க நகர்வுகளையும் நேரடியாக எதிர்கொண்ட அனுபவம் உள்ள எமக்கே மீண்டுமொரு நடவடிக்கையை இத்தனை ஆண்டுகள் ஓடியும் ஒழுங்குபடுத்துவது இவ்வளவு சிரமமாக இருக்கின்ற போது

எந்த ஆயுதப் போராட்ட அனுபவமும் இல்லாமல் இருக்கின்ற தமிழக நண்பர்களால் மிகப் பெரிய எதிரியான இந்தியாவை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடுதல் உடனடியாக சாத்தியமானதா..?

கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவான நவீன இராணுவ தளபாடங்களை இறக்குமதி செய்த நாடும், உளவுத்துறையின் முகவர் விரிவாக்கத்திலும், நவீன இராணுவ சாதனங்களின் இற்றைப்படுத்தலிலும் முன்னணியில் இருக்கும் நாடும் இந்தியாதான்.

இப்படியானதொரு நிலையில் இந்திய, இராமாயண, சினிமா, சாதி மோகத்தில் காலங்காலமாக மூழ்கிக்கிடந்தவர்களிடம்  ஏன் இந்தியத்துக்கு எதிராக போராட வேண்டுமென்று கருத்தியல் ரீதியில் அவர்களை தயார் செய்தல் தானே இப்போது தேவையானது. கருத்தியல் ரீதியில் தயார் செய்யாமல் உடனே ஆயுதமெடுத்து அடி என்று பெரிய இவன் மாதிரி வகுப்பெடுப்பது முகநூலில் மட்டுமே சாத்தியமானது.

இணக்க அரசியல் தான் எமக்கு சரியானதென அன்றிலிருந்து இன்றுவரை அரசை வருடிக் கிடப்பவர்களின் வெளிநாட்டுக்கான இணைப்பாளராக செயற்படும் நீங்கள் ஏன் இந்த வகுப்பை அங்கு எடுக்கக் கூடாது?

கருத்தியல் ரீதியில் எம்மினத்தின் விடுதலைக்கான தேவையை, உணர்வு பூர்வமாக முன்வைக்கும் போது ஒரு கட்டத்தில் தமிழ்தேசிய அரசியலை முன்வைத்தவர்களின் கட்டுப்பாட்டை மீறி அவர்களே அறியாமல் ஓர் ஆயுதப் போராட்டம் உருவாகி தன் வழியில் செல்லும், அதுவரை தேவையானது கருத்தூட்டல்.
இன எழுச்சிக்கான கருத்தூட்டத்தை செய்யாமல் முன் ஆயத்தமில்லாமலிருக்கும் சமூகத்தை உடனே ஆயுதமேந்து என்று சொல்வது முட்டாள்தனமானது.

இப்போது வலைப்பின்னலாக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும் உலக இராணுவ தொழில் நுட்ப வளர்ச்சி என்பது 90℅ இலும் நாம் 0℅  இலும் நிற்கிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழரசன் காலத்தில் எந்தளவிற்கு நம் இராணுவ நிலை? இருந்ததோ இப்போது அதனை விட குறைந்த பலத்தில் நாமும், 100 மடங்கு வளர்ந்து இந்தியமும். 

அஞ்சுவது அஞ்சாமை பேதமை'
மற்றும்
வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்

காலம் தேவையெனில் கனியும் அதுவரை உரியவர்களை உதறேல்..

No comments:

Post a Comment